Translate

Monday, January 28, 2013

Muslim and Kamal

 இந்தப் படத்தை பார்த்த ஒரு மலேஷிய முசுலிம் சகோதரர், எதிர் தரப்பு முசுலிம் அமைப்பின் வாதத்தை முற்றிலுமாக மறுத்துள்ளார். “படம் ஆப்கானின் அமரிக்க எதிர்ப்பு தீவிரவாதம் பற்றி பேசுகிறதே தவிர தமிழ் முசுலிம் தீவிரவாதம் பற்றி பேசவில்லை. எந்த தமிழ் முசுளிமையும் மூளை சலவை செய்வதாக காட்டவில்லை.
கமல் முதன் முதலில் உமரை சந்திக்கும் போது ‘எப்படி தமிழ் பேசுறீங்க என் கேட்கும் போது நான் ஒரு வருடம் கோயம்புத்தூரிலும், மதுரையிலும் சுற்றித் திரிந்தேன் என்பார். இங்கே எந்த இடத்திலும் பயிற்சி கொடுத்தேன் என சொல்லவில்லை.
அடுத்து உமர் கமலை வைத்துக் கொண்டு தன் மகன் கண்ணை கட்டி துப்பாக்கியில் கையை வைத்து இது என்ன என்பார். அவர் அதை சரியாக சொல்வார். இந்த இரண்டு காட்சிகளை பார்த்து முசுலிம்கள் கொதிப்படைவார்கள் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை”, என்று தன்னுடைய வலை தளத்தில் எழுதி இருக்கிறார் மொகமது பரூக்.
இவர்களுக்கேல்லாம் முசுலிம் தீவிரவாதமும், முசுலிம் மார்க்கமும் வேறு வேறு என்று தெரிந்திருக்கிறது. முசுலிம் தீவிரவாதத்தை எதிர்த்தால், முசுலிம் மதத்தை எதிர்த்தாகாது என்று புரிந்திருக்கிறது.
முசுலிம் அமைப்பினரின் வற்புறுத்தலில் பேரில் அவர்களுக்கு படத்தை திரையிட்டுள்ள கமல், படத்தை புரிந்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்த்திருக்கிறார். ஆனால், மேற்குறிப்பிட்ட காட்சிகளை முசுலிம் அமைப்பினர் எதிர்த்த போது, “இதற்கெல்லாம் என்னிடம் ஆதாரம் உள்ளது. அவற்றை நீக்க முடியாது” என்றும் கூறியுள்ளார். இதை அந்த முசுலிம் அமைப்பின் தலைவரே ஒப்புக் கொண்டுள்ளார். அதோடு, தன்னுடைய அறிக்கையில், எதிர்க்கும் இந்த சிறு அமைப்புகள் எல்லோரும் தேச பக்தியை முன்னிறுத்தவில்லை என்று கூறியுள்ளார். இதுவே அவர் முசுலீம்களை கவர நினைக்கவில்லை என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றது.
மறு புறம், இசுலாமிய அடிப்படைவாதிகள் பேசுவது போல தமிழ் சினிமாவும் கமலும் ஒன்றல்ல! விஜயகாந்த்-உம், அர்ஜூனும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாடும் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த காலம் ஒன்று இருந்தது. இந்தக் காலக் கட்டத்தில் தான் எல்லா முசுலிம்களும் தீவிரவாதிகள் என்பது போன்ற ஒரு மாயை ஏற்பட்டது. இந்த கருத்து பரவியதில் தமிழ் சினிமாவின் பங்கு மிகவும் பெரியது. ஆனால், அந்த காலக் கட்டத்தில், தைரியமாக இந்துத்வ வெறித்தனங்களை நேரடியாக சாடியவர் கமல் ஹாசன் ஒருவர் தான்.
இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால், 1993-ல் நடந்த மும்பை கலவரத்தின் போது, அப்போது பிரதமராக இருந்த நரசிம்ம ராவ்-இடம் சென்று ஒரு இந்தியனாக கமல் முறையிட்ட சம்பவத்தை சொல்லலாம். இதை பற்றிய முழு நீளச் செய்தி, 7-2-93 அன்று ஆனந்த விகடனில் வெளிவந்தது (விவரத்தை கேட்பவர்களுக்கு மின் அஞ்சலில் நான் அனுப்பி வைக்கிறேன்).
தன்னுடைய ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் படங்களில் கல்கத்தா, குஜராத் இந்துத்வ தீவிரவாதத்தை கடுமையாக சாடியுள்ளார் அவர். எல்லா முசுலிம்களும் தீவிரவாதிகள் அல்ல என்ற கருத்தை தசாவதாரத்தில் சொல்லி இருக்கிறார். இதை நான் ஏற்கனவே என்னுடைய முந்தைய கட்டுரையில் விளக்காமாக கூறியுள்ளேன். தமிழ் சினிமா நடிகர்கள் எல்லோரும் கூத்தாடிகள் என்று நா கட்டுப்பாடில்லாமல் பேசும் அடிப்படைவாதிகள் தான் தமிழ் சினிமாவிலிருந்து தனித்து நிற்கும் கமல் போன்ற கலைஞர்களை புரிந்து கொள்ளாமல் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, தேச பக்தி மிக்க முசுலிம்களும், பகுத்தறியத் தெரியும் இந்துக்களும் கமலுக்கு ஆதரவாகவே உள்ளனர்.
கமல் உன்னை போல் ஒருவனில் கூறியது போல, இப்போது நடக்கும் இந்த சண்டை மற்றுமொரு இந்து-முசுலிம் விளையாட்டு. இந்து அடிப்படை வாதிகள், கமலை முசுலிம் அபிமானி என்று சொல்லி பந்தை(கமலை) எதிர் திசை நோக்கி தட்டிவிடுகிரார்கள். அவர்கள், இவர் முசுலிம் எதிர்ப்பாளர் என்று சொல்லி வேறு பக்கம் தட்டி விடுகிறார்கள். நடுவில், விசிலை வைத்துக் கொண்டு நீதி மன்றம் நிற்கிறது. படத்தை பார்த்துவிட்டு, இதில் எந்த முசுலிம் எதிர்ப்பும் இல்லை என்ற தீர்ப்பு வந்தால், இவர்கள், நீதிபதி ஒரு இந்து. அவர் முசுலிம்களுக்கு எதிராகத் தான் தீர்ப்பு எழுதுவார் என்று சொல்வார்கள். தணிக்கை அதிகாரியாக இருந்த நேர்மையான முசுலிமிற்கு துரோகி என்ற பட்டம் தான் மிஞ்சும். நாசரும், துரோகி! உண்மையைச் சொல்லும் அனைவரும் துரோகிகள்!

No comments: