Translate

Saturday, August 25, 2012

[kol] MALL

தமிழகத்தில் பல இடங்களில் மால் கலாச்சாரம் பரவிக் கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டும் இன்னும் சில வருடங்களில் சுமார் இருபது மால்கள் திறக்கப்பட இருக்கிறது. சிற்றூர்களிலும், மேலும் பல முக்கிய நகரங்களிலும் சிறு சிறு மால்கள் தியேட்டர்களோடு திறக்கப்படவிருக்க, பார்க்கிங் என்ற பெயரில் அடிக்கப்படும் கொள்ளையைப் போல புது புதுசாய் யோசித்து மக்களின் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். கவர்ச்சிகரமான ஸ்டைலில். முக்கியமாய் புட்கோர்ட்டில், கேம்ஸ் செக்‌ஷனில்.
 
ஒவ்வொரு மாலிலும் ஒரு ப்ளோர் முழுவதும், புட்கோர்ட்டும், ஒரு கேம் கோர்ட்டும் இருக்கும். இந்த புட்கோர்ட்டுகளில் பத்திலிருந்து ஐம்பது கடைகள் வரை ஒவ்வொரு மாலின் சைசுக்கு ஏற்றார்ப் போல இருக்கும். முக்கியமாய் சென்னையில் ஆங்காங்கே நீங்கள் பார்க்கும் சிறு ரெஸ்டாரண்டுகள், புதிய வகை உணவுகள் என்று வெஜ், நான்வெஜ், இந்தியன், தந்தூரி, சைனீஸ், என்று உலக அளவிலான சாப்பாட்டு வகைகள் தருவதாய் சொல்லி முழுக்க முழுக்க இந்திய சாப்பாட்டை தந்து கொண்டிருப்பார்கள். இவர்களின் விலைப் பட்டியலைப் பார்த்தால் மயக்கம் போட்டு விடுவீர்கள். சரி அதை விடுங்கள். மால்கள் இவர்களிடம் அடிக்கும் கொள்ளையை அவர்கள் நம்மிடம் தானே அடிப்பார்கள். ப்ரச்சனைக்கு வருவோம்.
 
இம்மாதிரியான புட்கோர்ட்டுகளில் நாம் சாப்பிட வேண்டுமென்றால் அந்தந்தக்கடைக்கு நேரடியாய் போய் நாம் பணம் கொடுத்து சாப்பிட முடியாது. அதற்கு ஒரு கவுண்டர் இருக்கும் அங்கு போய் குறைந்தபட்சம் நூறு ரூபாய் கொடுத்து ஒரு ஸ்மார்ட் கார்ட் வாங்கிக் கொள்ள வேண்டும். அதில் பத்திலிருந்து இருபது ரூபாய் அந்த கார்டுக்கு எடுத்துக் கொள்வார்கள். நாம் எவ்வளவு ரூபாய்க்கு வேண்டுமானாலும் அதில் சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். அப்படி சார்ஜ் ஏற்றிய கார்டை எடுத்துக் கொண்டு தண்ணீர் கூட கொடுக்காத கடைகளில் அவர்களிடம் நாம் ஆர்டர் செய்யும் அயிட்டங்களுக்கான பணத்தை அந்த கார்டில் தேய்த்து கழித்துக் கொள்வார்கள். சரி.. ஆயிரம் ரூபாய்க்கு சார்ஜ் செய்த கார்டில் சுமார் எட்டு நூறு ரூபாய்க்கு சாப்பிட்டாகிவிட்டது. மீதமிருக்கும் இருநூறு ரூபாயில் இருபது ரூபாய் கார்டுக்கான கட்டணம் கழிக்கப்பட்டிருக்கும். இருபது போக மிச்சமிருக்கும் காசை திரும்பக் கேட்டால் அவர்கள் தர மாட்டேன் என்பார்கள். கேட்டால் லைப் டைம் கார்டு நீங்கள் எப்போது வந்தாலும் மீதமிருக்கும் காசில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று கூறுவார்கள். நான் வெளியூரிலிருந்து வருகிறேன் திரும்ப வருவது சந்தேகம் தான் அதனால் எனக்கு காசைக் கொடுங்கள் என்று கேட்டால் முடியாது எங்கள் சட்டப்படி என்பார்கள். நாம் கடைக்காரரிடம் நேரடியாய் கொடுக்காமல் இப்படி கவுண்டரில் பணம் கட்டி சார்ஜ் ஏற்றி சாப்பிடுவதால் நமக்கு என்ன பயன்?. கார்டினால் ஏதாவது டிஸ்கவுண்ட் கிடைக்கிறதா? லைப் டைம் என்பது யாருடய லைப் டைம் வரைக்கும். மீதமிருக்கும் காசை ஏன் தர மாட்டேன் என்கிறார்கள்? அந்த காசுக்கு ஏதாவது வட்டி தருவார்களா? என்பது போன்ற கேள்விகளை கேட்டிருக்கிறீர்களா? பெரும்பாலும் யாரும் கேட்பதில்லை. அதிலும் ஐடி ஆட்களும், கல்லூரி மாணவ மாணவிகளும் வரும் இடத்தில் இப்படி பத்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் சண்டையிடுவது கெளரவக் குறைச்சலாய் நினைத்துக் கொண்டு அவர்கள் சொல்வதையெல்லாம் வேத வாக்காய் கேட்டுக் கொண்டு செல்கிறார்கள். எங்களைப் போன்ற சில பேரைத் தவிர. இதே முறை தான் அங்கிருக்கும் கேம் செண்டர்களிலும்.
 
இந்த கார்டு முறையில் பிரபல உணவகங்களான, கே.எப்.சி, மெக்டொனால்ட், பிட்ஸச கார்னர், மற்றும் வட இந்திய செயின் உணவங்கள் வரவே வராது. அவர்களுக்கு என்று அவரவர் கவுண்டர். இந்த கார்டினால் எந்த விதமான உபயோகமும் வாடிக்கையாளர்களுக்கு கிடையாது. இது முழுக்க, முழுக்க, மாலில் புட்கோர்ட் நடத்துபவர்களுக்கும், கடைக்காரர்களுக்குமானது. அதாவது அங்கிருக்கும் ஒவ்வொரு கடையில் நடக்கும் வியாபாரத்தில் இருபது முதல் முப்பது சதவிகிதம் வரை புட் கோர்ட் நடத்துபவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் எப்படி அதை கண்டுபிடிப்பது. அதனால் இவர்களுக்குள் ஒரு கார்ட் நெட்வொர்க் சிஸ்டத்தை வைத்துக் கொண்டு, வாடிக்கையாளர்களிம் காசை மால் நிர்வாகம் வாங்கிக் கொண்டு விடும். ஒரு மாதம் கழித்து ஒவ்வொருவருடய அக்கவுண்டில் எவ்வளவு வியாபாரம் ஆகியிருக்கிறது என்று கணக்குப் பார்த்து அதில் அவர்களுக்கு வரவேண்டிய சதவிகிதத்தை எடுத்துக் கொண்டு மீதத் தொகையை கடைக்காரர்களுக்கு தருவார்கள். இவர்களிடம் வாடகை மற்றும் மெயிண்டெனெஸ் என்று தனியாய் வாங்கும் மால்களும் உண்டு. இவர்களின் வருமானத்துக்காக, கணக்கு வழக்குகளை சரி பார்க்க உதவும் இந்த டெக்னாலஜிக்கு நம்மிடம் இவர்கள் இருபது ரூபாய் வாங்குகிறார்கள். இதை தட்டிக் கேட்ட நானும் சுரேகாவும் EAவில் ப்ரச்சனை செய்து, இருபது ரூபாயை திரும்பி வாங்கியிருக்கிறோம் தொடர்ந்து போராடி அந்த இருபது ரூபாயை வாங்குவதை கடந்த ஜனவரியிலிருந்து அவர்கள் வாங்குவதில்லை. ஆனால் அதை வேறு விதமாய் கொள்ளையடிக்கிறார்கள்.
 
உதாரணத்திற்கு ஒரு நாளைக்கு 4000 பேர் புட்கோர்ட்டில் சாப்பிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒவ்வொரு வரும் குறைந்த பட்சம் 10 ரூபாய் மீதம் வைத்திருக்கிறார்கள் என்று வைத்தால் கூட ஒரு நாளைக்கு 40 ஆயிரம் ருபாய். ஒரு மாதத்திற்கு 12 லட்சம். ஒரு வருடத்திற்கு 14 கோடியே 40 லட்சம் வரும். இதில் லைப் டைம் மெம்பர்ஷிப் என்ற வகையில் திரும்ப வந்து சார்ஜ் செய்து சாப்பிடும் வாடிக்கையாளர்கள் சுமார் பத்து சதவிகிதம் இருந்தாலும் கூட மீத மிருக்கும் பணம் முழுவதும் மால்களின் கையில். இதில் பல மீண்டும் அங்கே வந்திருக்கக்கூட மாட்டார்கள். இப்படி இவர்களிடம் சேரும் பணத்திற்கு வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது வட்டியோ அல்லது சலுகையோ தருகிறார்களா? என்று பார்த்தால் ஒன்றுமில்லை. நம்மிடம் பத்து ரூபாய் குறைந்தால் அவர்களின் மாலில் பார்க்கிங் செய்யக்கூட அனுமதிக்காதவர்களிடம் நம் பணத்தை விட்டு வைத்திருக்கிறோம். அதிலும் ச்ட்டமாய் தர முடியாது என்று போர்டு போட்டு வைத்திருக்கிறார்கள். நம் காசை நம்மிடம் கொடுப்பதில் என்ன கஷ்டம் அவர்களுக்கு?. அதை தரமாட்டேன் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?. நாங்கள் போர்டு போட்டுத்தான் வாங்குகிறோம் என்று சொன்னாலும், குடும்பங்களோடு வரும் மக்கள் சரி ஒரு நாள் கூத்து என்று நினைத்தும், குழந்தைகளின் வற்புறுத்தலுக்காகவும் கேம் கோர்ட்டிலும், புட்கோர்டிலும் இப்படி பணத்தை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். இதற்கு அரசும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறது. மால்களில் நடத்தப்படும் தியேட்டர்களில் இவ்வளவுதான் உட்சபட்சமாய் தொகை வாங்க வேண்டும் என்று சட்டம் இருக்கும் போது மால்களில் பார்க்கிங் மற்றும் இம்மாதிரியான கொள்ளைகளை தடுக்கும் படியாய் ஏன் சட்டம் வரையறுக்கப்படவில்லை.
 
போன வாரம் ஈ.ஏவில் பணத்தை ஏன் கொடுக்க மாட்டீர்கள்? என்று கேட்ட போது அங்கே இருந்த புட்கோர்ட் மேனேஜர் வேறு வழியில்லை சார். எங்கள் சட்டதிட்டம் இது. நானாக இருந்தால் இங்கே அடிக்கும் கொள்ளைக்கு உடன் பட மாட்டேன். நீங்கள் இதை அக்கவுண்ட் டிபார்ட்மெண்ட் ஹெட்டிடம் கேட்டுக் கொள்ளூங்கள் என்று சொன்னார். பாலாஜி என்கிற அவருக்கு போன் செய்தால் நாங்கள் அப்படித்தான் வாங்குவோம் உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளூங்கள் என்று சொல்கிறார். மக்களின் பணத்தை வைத்துக் கொள்ள எந்த விதி, எந்த அரசு இவர்களூக்கு அதிகாரம் கொடுத்தது?. எந்த அதிகாரம் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று சொல்லும் அளவிற்கான தைரியத்தைக் கொடுத்தது? என்று கேட்டால் நாம் தான் என்று அழுத்தம் திருத்தமாய்ச் சொல்வேன். ஏனென்றால் இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டியது வாடிக்கையாளரான நம் வேலை. நம்மில் பெரும்பாலோர் உயர்தர இடம், தோழி நண்பிகள், குடும்பத்தாரின் முன்னிலையில் பத்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் எதற்காக சண்டைப் போட வேண்டும் என்ற வீண் ஜம்பம். மேலும் இப்படி நம்மிடம் கொள்ளையடிப்பது பற்றி உணராமை. அதைவிட நம்மிடம் காசு இருக்கிறதே எதற்காக இதற்கு சண்டைப்போட்டு நேரத்தை விரயம் செய்ய வேண்டும் என்கிற அலட்சியம் இது எல்லாம் சேர்ந்து அவர்கள் கொள்ளையடிப்பதை லீகலாக்குகிறார்கள். ரெண்டு பேர் ஒரு நாள் சண்டைப் போட்டதற்கே கார்டுக்கான இருபது ரூபாயை வாங்காமல் நிறுத்தியவர்கள் ஒரு நாளைக்கு நூறு பேர் ஒவ்வொரு புட்கோர்ட்டிலும் தங்கள் பணத்தை திரும்ப கேட்டு ப்ரச்சனை செய்தால் எப்படி தராமல் போவார்கள்.
 
சத்யமில் ஒரு காலத்தில் பாப்கார்னுக்கு விதவிதமான் மசாலா டேஸ்ட் பொடிகளை தருவார்கள். பின்பு அதையே ஒவ்வொரு டேஸ்டுக்கு ஐந்து ரூபாய் என்று தனியாய் வசூலிக்க ஆரம்பித்தார்கள். அப்படி ஆரம்பித்த சில மாதங்களிலேயே மக்களிடம் அதற்கான வரவேற்ப்பில்லை அது மட்டுமில்லாமல் மக்களிடம் ஏன் அதற்கு தனி விலை என்ற கேள்வி வேறு எழ, வேறு வழியில்லாமல் இப்போது மீண்டும் அந்த பொடிகள் இலவசமாய் அங்கே கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி நாம் கேட்டால் கிடைக்கக்கூடிய பல விஷயங்களை நமக்கெதற்கு என்றும் அலட்சிய மனப்பான்மையில்லாமல் அணுகினால் நிச்சயம் சரியான தீர்வு கிடைக்கும். என்னைப் போன்ற ஒத்த கருத்துள்ள சுரேகாவும் ஒருநாள் போராடியதால் தினந்தோறும் 4000 வாடிக்கையாளர்களிடமிருந்து 20 ரூபாய் காப்பாற்றப் பட்டிருக்கிறது. இது யாருக்கும் தெரியாது. தெரியவும் வேண்டாம். ஆனால் பலன் மக்களுக்கு. எதிர்கால சந்ததியருக்கு. விரைவில் இதனை எதிர்த்து கேட்டால் கிடைக்கும் மூலமாய் சட்ட ரீதியான வழக்கு ஒன்றை தொடுக்கவிருக்கிறோம். அதற்கு உதவும் சட்ட ஆலோசகர்கள், மற்றும் வக்கீல்கள் யாராவது இருந்தால் அவர்களின் உதவியைக் கோருகிறோம்.
 
அஞ்சு பைசா திருடினா தப்பா?
 
இல்லீங்க.
 
அஞ்சஞ்சு தடவையா அஞ்சு பைசா திருடினா?
ஏதோ தப்பு மாதிரி தெரியுதுங்க
 
அஞ்சு கோடி பேர் அஞ்சு பைசா வீதம் திருடினா?
தப்புதானுங்க

No comments: