Translate

Saturday, March 31, 2012

Ananth Krishnan-Nellai Tamilan

ஆனந்த் கிருஷ்ணன். அமெரிக்காவில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர்; தனது அபார அறிவாற்றல் காரணமாக படிப்படியாக முன்னேறி இப்போது சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தகவல் தொடர்பு அதிகாரியாக உள்ளார்.
தூதரகம் என்பது விசா வழங்குவதற்கான ஒரு இடம் என்றறியப்பட்ட நிலையில் அதையும் தாண்டி மாணவர்களுக்கு சேவை செய்யும் ஒரு மையமாக மாற்றி வருபவர். இங்குள்ள மாணவர்கள் அங்கு போய் என்ன படிக்கலாம், அமெரிக்காவில் உள்ள மாணவர்கள் இங்குவந்து என்ன படிக்கலாம் என்பதை எடுத்துச் சொல்லி மாணவர்களின் கலங்கரை விளக்கமாய் திகழ்பவர். இதன் காரணமாக அமெரிக்கா செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரங்களில் இருந்து லட்சங்களுக்கு போய்விட்டது. இதே போல இங்குவரும் அமெரிக்கா மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
நமது மாணவர்கள் மருத்துவம், சட்டம் மற்றும் நிர்வாகவியல் போன்ற துறைகளை படிக்க செல்கிறார்கள். அமெரிக்கா மாணவர்கள் இங்கு தொல்பொருள் துறை, இசை, நடனம் போன்றவைகளை கற்றுக்கொள்ள வருகிறார்கள்.
அமெரிக்கா கல்வி என்பது ஒன்றும் எட்டாக்கனியல்ல, முயற்சித்தால் அனைவருக்கும் எட்டும் கனியே என்று பல்வேறு கல்லூரிகளுக்கு நேரில் போய் சொல்லிக் கொடுத்து வருகிறார்.
இந்த அளவிற்கு தமிழக மாணவர்கள் மீது அக்கறை எடுத்து செயல்படும் அமெரிக்க அதிகாரியான ஆனந்த் கிருஷ்ணனின் பூர்வீகம் தமிழகமாகும். தந்தை கிருஷ்ணன் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானைச் சேர்ந்தவர்; தாயார் சுபத்ரா கடையத்தை சேர்ந்தவர்.
இந்த சூழ்நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும், பின் தந்தையும், தாயும் பிறந்த மண்ணைப் பார்க்கவும் விரும்பி நெல்லை செல்லும் தகவல் அவரது ஆலோசகர் இளையபெருமாள் மூலம் கிடைத்தது.
அதன் அடிப்படையில் நெல்லைக்கு சென்றோம். பேச்சை சுருக்கமாக வைத்துக்கொண்டு மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் மாணவர்களை நிறைய கேள்வி கேட்கச் சொல்லி விளக்கம் தந்தார். இந்த புதிய, எளிய அணுகுமுறையை மாணவர்கள் பாராட்டியது அவர்களின் அரங்கை அதிரச் செய்யும் கைதட்டலின் மூலம் தெரிந்தது.
அதன் பின் தனது அட்டவனையில் இல்லாத போதிலும், பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறை படிக்கும் மாணவர்களின் நலனிற்காக தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள ஊடக கட்டிடத்தையும், வீடியோ கூடத்தையும் பார்த்தவர் மிகவும் வியந்து போனார். பின் துறை தலைவர் கோவிந்தராசுடன் நடந்த நேர்காணலிலும் தனது கருத்தை பலமாக பதிவு செய்தார்.
மறுநாள் தனது அப்பா, அம்மா மற்றும் தனது துணைவியார் கிறிஸ்டைன், மகன்கள் ரூபன், ரோகன் மற்றும் தனது உதவியாளர் இளையபெருமாள் மற்றும் நமது தினமலர் ஊடக குழுவினருடன் தாமிரபரணி கரையோரம் தனது பயணத்தை துவங்கியவர் கங்கைகொண்டான், கடையம், குற்றாலம் ஆகிய பகுதிகளுக்கு சென்றார். ஒவ்வொரு இடத்தையும் அணு அணுவாக ரசித்தார். அதிலும் மகாகவியின் பாதம் பட்ட கடையத்தின் ரோடுகளில் தனது தந்தையுடன் நடந்து செல்ல விருப்பப்பட்டார். அப்படியே நடந்தும் சென்றார், அவரது நடையில் நான் தமிழன் என்ற பெருமை இழையோடியது.
நன்றி: தினமலர்

No comments: